Wednesday, July 27, 2016


கபாலி வெற்றி யாருக்கு?

கபாலி வெற்றி யாருக்கு?

சிகெரட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்கும் காட்சி இல்லை. தலைமுடியை அவ்வபோது கோதிக்கொண்டிருக்கும் காட்சிகள் இல்லை, பெண்களின் அடக்கத்திற்கு அறிவுரை கூறவில்லை,  'நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துடுவேன், ஒருதடவ சொன்னா நூறுதடவ சொன்னமாதிர், ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்' என்பது போன்ற வெட்டி பஞ்ச் டயலாக் இல்லை.  ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நடித்துள்ள ரஜினியை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.

நல்ல கதையும் கதாபாத்திரமும் அமையும் போது ஓட்டு வேலை தேவையில்லை. இதுநாள்வரை அப்படிப்பட்ட ஒட்டு வேலைக்கான உதாரணம்தான் மேலே சொன்ன அந்த ஒட்டுகள்.
தமிழகத்திலிருந்து தோட்டத்தொழிலுக்காக மலேசியா சென்றவர்களின் வாழ்வியல் சூழல்,  அடக்குமுறைக்கு எதிராக போராடும் போராளி, இல்ல ஒரு தாதா எப்படியாவது வைத்துக்கொள்ளுங்கள்.
சமத்துவம் அடக்குமுறை என்று பேசத் துவங்கிவிட்டால் சாதியத்தை பேசாமல் எப்படி இருக்கமுடியும்? அதன் அடையாளமான அம்பேத்கரை, காந்தியை எப்படி பேசாமல் இருக்கமுடியும்? அவ்விருவரும் அணிந்த ஆடைகளுக்கான காரணங்களைப் பற்றி எப்படி பேசாமல் இருக்கமுடியும்?

மேல்சாதி ஆணவத்தைத் தாங்கிப்பிடிக்கிற, மீசையின் பாரம்பரியம் பேசுகிற (மீசையின் பாரம்பரியம் என்றதும் ஆதவன் தீட்சண்யாவின்  "மீசை என்பது வெறும் மயிர்'  நினைவுக்கு வருகிறது)  பல திரைப்படங்களை விமர்சனம் செய்யும்போது, ஏன் ஒரு சாதியை தூக்கிப்பிடித்து மறு சாதியை தாழ்த்துகிறாய் என்று கேட்க தினமணிக்கு வக்கில்லை.

சேரிகள் என்றாலே குடிசையும் குப்பைகளும், சாக்கடையும், மூத்திரவாடையும், அங்கு வாழ்கிறவர்கள் பிக்பாக்கெட், ரவுடித்தனம் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் என்று சினிமாவில் பார்த்து பார்த்து அதுதான் உண்மை என்பதுபோல பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

மெட்ராஸ் திரைப்படம் அந்த பிம்பத்தை உடைத்து  அரசியல் பேசியது. அதே அரசியலை கபாலியும் பேசியது. அவ்வளவுதான் அதற்கு வைரமுத்து தேவரிலிருந்து வைத்தியநாத ஐயர் வரை படம் வந்து ரெண்டே நாட்களில் வானுக்கும் பூமிக்கும் குதித்து தங்களது அரிப்பினை தீர்த்துக் கொண்டனர்.
தினமணி ஒரு படி மேலே போய் அசிங்கமான முறையில் தனிமனித தாக்குதலில் விமர்சனம் செய்யும் கீழ்த்தரமான செயலில் இறங்கியது.
எது அவர்களை அவ்வாறு குதிக்கச் செய்தது?
ஆதிக்க வெறி என்பதைத்தவிர இதில் வேறு ஏதுமில்லை. ஆயிரமாயிரம் ஆண்டு காலம் அடிமைச் சமூகம் கல்வி, திறன், பொருளாதாரம், அறிவு இவற்றிலிருந்து மேலெழுந்து வருவதை சகிக்கமுடியாததன் விளைவே தினமணி கதறல். ரஜினி சொல்வது போல் உனக்கு எரியுதுன்னா நான் கோட் போடுவேன், உனக்கு புடிக்கல்லன்னா போய் சாவுடா...!



Wednesday, July 24, 2013


சாதி செய்யும் சதி!
================================

"நான் அவரை விரும்பிதான் கல்யாணம் செஞ்சுகிட்டேன்" என்ற வார்த்தை "நான் என் அம்மாவுடன்தான் இருக்கப்போறேன்" என்ற வார்த்தையாக மாற இந்த ஆதிக்கச் சாதீய சமூகமும் அச்சாதிகளின் ஒரே பிரதிநிதி தான்தான் என்ற நினைப்போடு சாதீய வெறியாட்டம் போடும் பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய சதிச்செயல்கள் எத்தனை? தீண்டாமைத் தீ மீண்டுமொருமுறை தர்மபுரி தலித் மக்களை பொசுக்கி இருக்கிறது.

கடந்த அக்டோபரில் நடைபெற்ற இளவரசன் திவ்யா சாதிமறுப்புத் திருமணத்தை காரணம் காட்டி, திவ்யாவின் குடும்பத்தை சாதீய கட்டப்பஞ்சாயத்துக்களில் நிற்கவைத்து செய்த அவமானத்தால் நவம்பரில் திவ்யாவின் தந்தை மரணமடைந்தார். தற்போது இளவரசனின் மரணம் நடைபெற்றுள்ளது. இவ்விரு மரணங்களுமே இயற்கைக்கு மாறாக நடந்துள்ளது. இவ்விரு மரணங்களுமே சாதீய வெறியாட்டத்தின் தூண்டுதலில்தான் நடந்துள்ளது. தற்கொலைக்கு தூண்டுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அப்படியானால் தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்?

நீதிமன்றம் எல்லா வழக்குகளிலும் சாட்சிகளையும் சம்பிரதாயங்களையும் வைத்து அணுகுவது போலவே சமூகத்தில் புரையோடி செல்லரித்துக் கொண்டுள்ள சாதீய கட்டுமான வழக்கையும் அணுகியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமே.

திவ்யா இளவரசன் திருமணத்தின் விளைவாக தர்மபுரி மாவட்டத்தில் நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி உள்ளிட்ட தலித் கிராமங்கள் மீது கோரத்தாண்டவத்தை நடத்தி, அக்கிராமங்கள் அனைத்தும் தங்களுடைய உழைத்து சேர்த்த பணம், நகை, வீடு, வாகனம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். வீடுகளுக்கு தீ வைத்துக் கொளுத்தி மக்களை தெருவில் நிறுத்தியது சாதி வெறிக்கூட்டம். அம்மக்களுக்கு நிவாரணம் கோரி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். இந்த தலித் கிராமங்களின் மீது நடைபெற்ற சாதி வெறியாட்டத்திற்கான பின்புலமும் பாட்டாளிமக்கள் கட்சியின் கொள்கைகளும் ஒத்துப்போவதை யாரும் மறுக்கமுடியாது.

இந்த கிராமங்களின் மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ், தலித் அல்லாத ஆதிக்க சாதி அமைப்புகளை மாவட்டந்தோறும் கூட்டி சாதிவெறி பிரச்சாரத்தை நடத்தி தலித்துகளுக்கு எதிராக அனைத்து சாதியினரையும் திருப்பிவிட முனைந்த வெட்கக்கேடான விஷயத்தை செய்தார். கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்காத நிலையில், மீண்டும் சாதீய சாட்டையை கையிலெடுத்து சுழட்டி தங்களது அடையாள அரசியலைத் துவக்கியுள்ளார் ராமதாஸ்.

பொருளாதார கொள்கைகளில் நவீனமயத்தையும் சாதீய பண்பாட்டில் கரடுதட்டிய பிற்போக்குத் தனத்தையும் கொண்டு இயங்கும் பாட்டாளிமக்கள் கட்சியின் ராமதா, தங்களுக்கும் திவ்யா இளவரசன் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார். பிறகு ஏன் பாமகவின் வழக்கறிஞர் பிரிவின் பாலு ஆதிக்க சாதீயவாதிகளுக்காக திவ்யாவின் சார்பில் வாதாடிக்கொண்டிருக்கிறார் என்பதை ராமதா விளக்குவாரா?

சமூக சீர்திருத்தத்திற்காக இறுதி மூச்சுவரை போராடிய பெரியார், அம்பேத்கர், மார்க் படங்களை தேவைக்கேற்றப்படி தங்களது விளம்பரங்களில் போட்டுக்கொண்டு, ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி, மனித உரிமைகள்தான் எங்கள் முழக்கம் என்று பாமக அறிவித்துக்கொள்கிறது. இந்த முழக்கங்களுக்கும் அவர்கள் செய்துகொண்டிருக்கும் செயல்களுக்கும் துளியாவது சம்பந்தம் இருக்கிறதா? திவ்யா இளவரசன் திருமணத்தில் இவர்கள் சொல்லிக்கொள்கிற இந்த முழக்கங்களுள் ஏதாவது ஒன்று ஒத்துப்போகிறதா?

தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்டும், கூலிங்கிளாசும், டி சர்ட்டும் போட்டுக்கொண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பெண்களை மயக்கி காதல் நாடகமாடுகிறார்கள் என்று, சமூகநீதி போராளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்கிற ராமதா, இளவரசன் மரணத்திலாவது காதலில் நாடகமில்லை என்பதை உணர்வாரா?
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு பொதுக்கூட்டத்தில் வன்னிய குலப்பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா, நம் சாதிப் பெண்களை வேறு சாதியில் திருமணம் செய்துவைத்தால் தொலைத்துவிடுவேன் என்ற காடுவெட்டி குருவின் சாதி வெறிப் பேச்சும் சமூகநீதிக்கான போராட்டத்தை தீவிரமாக நடத்திய தமிழகத்தை தலைக்குனிய வைக்கிறது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கைகொள்ளும் பாமக ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை, இவர்கள் உண்மையிலேயே ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள தலித் மக்களின் நிலை?

இந்த விஷயத்தை வன்மையாகக் கண்டித்திருக்கவேண்டிய சமூக சீர்திருத்தத்தின் கதாநாயகர்களாக தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் திமுகவும், அண்ணாதிமுகவும் தர்மபுரி மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறார்கள். ஏனெனில் இந்த தலித் கிராமங்களில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்களுக்கும் பங்கிருக்கிறது.

சாதிவெறி என்பது தமிழகத்தில் உள்ள இடதுசாரிகள் தவிர அநேகமாக மற்ற அனைத்து கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதிமுகவின் இலக்கிய அணித்தலைவரும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பழகருப்பையா, 
"...நகரத்தாருக்குரிய (செட்டியார்) அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை நேர்மை, பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடல். இந்த அடையாளங்கள் தொடரவேண்டுமென்றால் நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்கவேண்டும். கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை நம் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கவேண்டும்..."
என்று கூறுகிறார். இவர் கூறும் அடையாளங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதுதானே. இவரின் பேச்சுக்கும் காடுவெட்டி குருவின் பேச்சுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
ஜனநாயக முற்போக்கு அறிவியல் சிந்தனை கொண்ட சமூக அமைப்புகளாலும் வர்க்க போராட்டத்தாலும் மட்டுமே சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்கமுடியும்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சாதிமறுப்பு திருமணம் நடைபெறுவது மிகவும் குறைவு. இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், பெரியார், சீனிவாசராவ் உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகள் வழிகாட்டியாக வைத்திருந்த தமிழகத்தின் தற்போதைய நிலை இதுதான்.

இளவரசன் மரணத்திற்குப் பிறகு உற்சாகமடைந்துள்ள இந்த சாதீய அமைப்புகள் தர்மபுரி மாவட்டம் வேப்பமரத்தூர் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற காதல் தம்பதியினர் சுரேஷ் சுதாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஊர்பஞ்சாயத்தைக் கூட்டி இருவரும் பிரிந்துவிடும்படி மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தம்பதியினரும் வழக்கம்போல் காவல்துறையினரின் பாதுகாப்பை நாடியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் விருத்தாசலத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட கண்ணகி, முருகேசன் இருவரையும் ஊர்மக்கள் முன்னிலையிலேயே விஷம் கொடுத்து துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இப்படி, கோவை சோமனூர் சிற்றரசு, தர்மபுரி சுகன்யா, ஈரோடு இளங்கோ, திருவண்ணாமலை துரை, பரமகுடி திருச்செல்வி, பழனி ஸ்ரீபிரியா, கடலூர் கோபாலகிருஷ்ணன், பண்ருட்டி பிரியா, உளுந்தூர்பேட்டை கண்ணன், தஞ்சை சதுரா, அரித்துவாரமங்கலம் சிவாஜி-லட்சுமி ஆகியோரை சாதீய சமூக கட்டமைப்பை காப்பாற்ற, திருமணம் செய்துகொண்டவர்களையும் விடாமல் விரட்டி விரட்டி உறவாடி அவர்களை நம்பவைத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து பெற்றவர்களை வைத்தே விஷம் கொடுத்து கொலை செய்தும், தற்கொலை செய்துகொள்ளச் சொல்லி நிர்ப்பந்தம் கொடுத்து கௌரவகொலை செய்யப்பட்ட காதல் ஜோடிகளின் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகும். பதிவான புகார்களில் சிலவற்றைதான் தந்துள்ளோம். பதிவாகாத கொலைப்பட்டியல்கள் இதைவிட 100 மடங்கு அதிகம்.

தமிழகத்தில் இந்துமுன்னணி, கர்நாடகாவில் ராம்சேனா, பாஜக போன்ற அமைப்புகளெல்லாம் தங்களை கலாச்சார காவலர்களாக காட்டிக்கொண்டு காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கட்டாய தாலி கட்ட வைப்பதும், காதலர்களை ஓடஓட விரட்டுவதும் சாதீய கட்டமைப்பு தகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே. இவர்களிலிருந்து ஒரு படி அதிகமாக தங்களது சாதிக் கவுரத்தைக் காப்பாற்றுவதற்காக மனிதத் தன்மையை காற்றில் பறக்கவிட்டு கொஞ்சமும் ஈவிரக்கமின்றி கவுரவ கொலைகளை அரங்கேற்றிவரும் சாதிய சமூகம், வன்னியர் சங்கம், பாமக போன்ற அமைப்புகளும் பலவிதமான பண்பாட்டு கலாச்சாரத்துடன் பழகி வருகின்ற தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டுமா?

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என்பதை பாட புத்தகங்களின் முகப்புப் பகுதியில் பதித்த அரசாங்கம் ஆதிக்கச் சாதிகளின் மனதில் பதிய வைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? தமிழக மக்களின் பொது நீரோட்டத்திலிருந்து தலித் மக்களை பிளவுபடுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் ஆதிக்கச் சாதியினரையும் கட்சிகளையும் அடையாளம் கண்டு அவர்களை புறந்தள்ளவேண்டும். அனைத்து சாதியிலுமே கஞ்சிக்கில்லாமல் வறுமையில் உழலும் அப்பாவிமக்கள் இருக்கின்றனர். தமிழக மக்கள் அனைவரும் சாதி வேற்றுமைகளை மறந்து வர்க்கமாக ஒன்றுபட்டு இப்படிப்பட்ட சாதீயவாதிகளுக்கு எதிராக போர்தொடுக்க வேண்டிய கடமை நம் முன்னே உள்ளது.

Tuesday, November 9, 2010

கல்வி வியாபாரிகள் குப்பையும் பொறுக்குவார்கள்...

கல்வி வியாபாரிகள் குப்பையும் பொறுக்குவார்கள்...
இரா.சரவணன் செவ்வாய், 26 பெப்ரவரி 2008 13:44

கட்டாய நன்கொடை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் சன்டிவியிலும் கலைஞர் டிவியிலும் மாறி மாறி பேட்டியளித்துக் கொண்டிருப்பதை காணலாம். பள்ளிக் கல்விக்கு விடிய விடிய வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான ரூபாயும் உயர்கல்விக்கு பல லட்சக்கணக்கான ரூபாயும் வட்டிக்கு வாங்கி, கொடுத்த பணத்திற்கு ரசீதுகூட இல்லாமல் கொட்டி அழுதுவிட்டு பிள்ளைகளை சேர்த்துவிட்டு வந்த பெற்றோர்கள் இந்த பேட்டியைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் எழும் ஆத்திர வார்த்தைகளை அச்சில் ஏற்றமுடியாது.தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி ஊழல் மற்றும் முறைகேடு நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய அரசு இயந்திரம், பிள்ளைகள் படித்தால் போதும் என்று நினைக்கின்ற அப்பாவி பெற்றோர்கள் புகார் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. பெரும்பாலான சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது தான். இவர்கள் இலவசக் கல்விக்காகவும், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்காகவும், தனியார் பள்ளி, கல்லூரிகளை கட்டுப்படுத்துவதுபற்றியும், அங்கு நடைபெறும் ஊழல்களைப் பற்றியும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எப்படி குரலெழுப்புவார்கள்?அரசு, டாஸ்மாக் வியாபார வளர்ச்சியில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சியில் காட்டுவதில்லை. 1990க்குப் பிறகு தமிழகத்தில் ஒரு அரசு பள்ளியோ ஒரு அரசு கல்லூரியோ புதிதாக உருவாக்கப்படவில்லை. ஆனால், தனியார் கல்லூரிகளும் பள்ளிகளும் ஊருக்கு ஊர், தெருவிற்கு தெரு முளைத்த வண்ணம் உள்ளன. விதிகளை மீறி கட்டப்பட்டு, 96 பிஞ்சுக் குழந்தைகள் தீக்கிரையான கும்பகோணம் பள்ளி இப்படி முளைத்ததுதான். குற்றவாளி யாரென்றும் காரணம் என்னவென்றும் உலகத்திற்கே தெரிந்தபிறகும் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இன்னும் காரணம் புரியாமல், குற்றவாளி தண்டிக்கப்படாமல் வழக்கு நடந்துகொண்டே இருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் நடத்துவார்கள் என்று பார்ப்போம்.இந்தியாவில் உள்ள 124 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 29 நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் 60 அரசு கல்லூரிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால்,120க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் உள்ளன. இவர்கள் எல்லாம் தங்களது சொந்தப்பணத்தைக் செலவுசெய்து பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டி, இந்தச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எப்படியாவது கல்வி அறிவு ஊட்டி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசையிலா செய்கின்றனர்? கல்வி நிறுவனங்கள் நடத்து வதை விட குப்பை பொறுக்கும் வியாபாரம் அதிக லாபம் கொடுக்கும் சூழ்நிலை வந்தால் நாளையே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு குப்பை பொறுக்கத் தயாராகிவிடுகின்ற குப்பைப் பொறுக்கிகள்தான் இந்த தனியார்கள். இப்படிப்பட்ட கல்விச் சாலைகளில் மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களது உரிமைக்காக போராடினால் அரசும், காவல்துறையும்,நிர்வாகமும், நீதித்துறையும், தனியார் முதலைகளுக்கு அரணாக நின்று செயல்படும்.திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியிலும், வெங்கடாசலத்திற்கு சொந்தமான ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியிலும் சீட்டுகளை 20 லட்சம் 40 லட்சம் என கூவிக்கூவி விற்றதை தொலைக்காட்சியில் ஆதாரத்தோடு காட்டி விளக்கியபிறகும் அந்த இரு கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன விளக்கம்தான் கேட்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. மனித உரிமை மீறல், மாணவர்கள் உயிரிழப்பு என சுயநிதி கல்லூரிகளின் கோரமுகம் சமீப காலத்தில் தென்படத் துவங்கியுள்ளன.அனைத்தையும் தின்று தீர்த்துவிட்ட உலகமயம் கல்வியில் தனது கோரப்பற்களை பதியவைத்த 19 ஆண்டுகளில் அரசு கல்வி மீதான தனது கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டது. அரசுப் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, தரமான கல்வியை கொடுக்கவேண்டிய அரசு அதைச் செய்யாமல் அரசுக் கல்லூரி என்றாலே அது எதற்கும் உதவாத கல்லூரி என்ற மாயையை பெற்றோருக்கு ஏற்படுத்தி, பயமுறுத்தி வைத்துள்ளது. பள்ளிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை குறைத்து மதிப்பிட வைத்துள்ளது. போதுமான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காமல், அரசே முன்நின்று பெற்றோருக்கு அதிருப்தியை செயற்கையாக ஏற்படுத்தி, அவர்களை தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நோக்கி ஓடவைத்து, தனியார் முதலாளிகளின் லாபத்தை அதிகப்படுத்த முழு உதவி புரிகிறது.மற்ற உலக நாடுகளிலெல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதமளவிற்கு கல்விக்கென நிதி ஒதுக்குகிறது. நம்மைவிட பின்தங்கிய நாடுகளில் கூட நம்மைவிட கூடுதலான அளவிற்கு கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால், இந்தியாவில் வெறும் இரண்டு சதத்திற்கும் குறைவாக கல்விக்கென நிதி ஒதுக்குகிறது. ற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில் படிக்கின்ற அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற எந்தவித உத்தரவாதமுமில்லாமல் பல லட்சங்களை அள்ளிக் கொடுத்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதியாவது மத்திய மாநில அரசுகள் கல்வி குறித்து தனது கொள்கை நிலைபாடுகளை மாற்றிக்கொள்ளட்டும்.ஆரம்பப்பள்ளியில் சேரும் மாணவ மாணவியர்களில் வெறும் 6 சதம் பேர்தான் உயர்கல்வியை பெறுகின்றனர். பொறியியற் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் மாணவர் களில் வெறும் 7 சதத்தினருக்கே படித்ததற்கேற்ற தகுதியான வேலை கிடைக்கிறது. ஆண்டுதோறும் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் ஆரம்ப கல்விக்கூட கிடைக்காமல் கொத்தடிமைகளாக வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களும், பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவனும், தெருக்கோடியில் வயிற்றுக்காக கயிற்றிலேறி வித்தைக்காட்டும் சிறுவனும் நம் கண்ணை விட்டு அகல மறுக்கிறார்கள்! - இரா.சரவணன்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு...

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு...
இரா.சரவணன் செவ்வாய், 25 மே 2010 12:29

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொன்மை வாய்ந்த, இலக்கிய இலக்கண மரபுகளை தாங்கி நிற்கும், எந்த மொழியின் கலப்பில்லாமலும் தனித்து நின்று இயங்குகின்ற, கிளை மொழிகளை உருவாக்கிய, இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுகளில் 55,000க்கும் அதிகமான தமிழ் தொல்லெழுத்துப் பதிவுகளைப் பெற்று மங்காத புகழோடு சிறந்து விளங்கும் செம்மொழியாம் தமிழுக்கு, கொங்கு மண்டலத்தில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறவிருக்கும் மாநாட்டை வரவேற்போம், பாராட்டுவோம்!
இதுவரை நடைபெற்ற எட்டு உலகத்தமிழ் மாநாடுகளின் (1966 மலேசியா, 1968 சென்னை, 1970 பாரீஸ், 1974 இலங்கை, 1981 மதுரை, 1987 மலேசியா, 1989 மொரீசியஸ், 1995 தஞ்சை) வரிசையில் இந்த மாநாடு நடைபெறவில்லை. உலகத்தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பு உள்ளது. அந்தக் கழகம் 2011ல் தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தலாம் என்ற உத்தேசத்தை அளித்தது.
ஆனால், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தமிழக முதல்வருக்கு தமிழ்ச்செம்மொழி மாநாடு தேவைப்படுகிறது. அதனால் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடனான உறவை முறித்துக்கொண்டு, முதல் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2010லேயே நடத்தத் திட்டமிட்டுவிட்டார். சர்வதேச தமிழ் அமைப்பின் உறவு முறிந்த நிலையில், அடுத்தடுத்த மாநாடுகள் மற்ற நாடுகளில் எப்படி நடத்தப்படும் என்பது புரியவில்லை.
1974, 1987, 1989ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளில் முன்வைக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இதுவரை நூல்களாகத் தொகுத்து வெளியிடப்படவில்லை.
தமிழின் தொன்மையும் தமிழரின் பண்பாடும் பாமரனுக்கும் எளியோனுக்கும் சென்றுசேரும் வகையில் சங்க இலக்கியங்கள், காப்பிங்கள், சிற்றிலக்கியங்கள், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ் கணக்கு நூல்கள், நவீன இலக்கியங்கள், தலித் இலக்கியங்கள், பெண் இலக்கியங்கள், திராவிட இலக்கியங்கள், இடதுசாரி இலக்கியங்கள் போன்றவையாவும் மெத்தப்படித்தவர்களின் கைச்சரக்குகளாகவே இருப்பதை மாற்றி, சாதாரணத் தமிழ் படிக்கத் தெரிந்தால் போதுமென்ற அளவுக்கு எளிய வகையில் சந்திபிரித்து, அருஞ்சொற்பொருளுடன், உரிய விளக்கத்துடன் மிகக்குறைந்த விலையில் அச்சிடப்பட்டு, மக்களிடம் அரசு கொண்டுச் சேர்க்கவேண்டும். இதுவே ஆட்சியிலிருப்போர் தமிழுக்குச் செய்யவேண்டிய இன்றியமையாத கடமையாகும்.
முத்தமிழான இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழை வளர்க்க, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூடுதல் முக்கியத்துவமளித்து அதற்குரிய ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் நியமிக்கவேண்டும். நாட்டுப்புறத்தமிழ், தெருக்கூத்து, வீதிநாடகம் போன்ற பாரம்பரிய பண்பாட்டு மரபுகளை பேணிக் காக்கவும் அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தமிழில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்துத் துறைகளிலும் அதிக அளவில் உருவாக்க வேண்டும்.
மேலும், மருத்துவம் பொறியியல் படிப்புகளில் தமிழ், தொலைக்காட்சிகளில் தமிழில் பாடப்படும் பாட்டிற்கு ஆங்கிலத்தில் தீர்ப்பளிக்கும் ஊடக பண்பாட்டுத்துறையில் தமிழ், வழிபாட்டுமுறையில் தமிழ், அறிவியலில் தமிழ், மதிக்கத்தக்க மொழியாக நாடாளுமன்றத்தில் தமிழ், தமிழக உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் வழக்காடும் வழக்குரைஞர் யாருக்காக வாதாடுகிறார் என்பதே தெரியாமல் இருக்கும் முறையை மாற்ற வழக்கு மொழியாகத் தமிழ், ஊடகத்தில் தமிழ், தத்துவத்தில் தமிழ் இறுதியாக ஆட்சி மொழியாகத் தமிழ் என செல்லவேண்டிய தூரம் அதிகம். அதற்காக இந்தச் செம்மொழி மாநாடு என்ன செய்யப்போகிறது?
தமிழின் பெருமையையும் தமிழிலக்கிய செல்வங்களின் சிறப்பையும் உலகறியச் செய்ய எடுக்கப்போகும் முயற்சிகள் என்ன? உயர்தனிச் செம்மொழித்தமிழை அயல்நாட்டவரும் கற்றுக் கொள்ள எவ்விதத்தில் உதவப்படும்? தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்போகும் நிதி எவ்வளவு? என்பதுபோன்ற கேள்விகளுக்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சொல்லப்போகும் பதில் என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது எது என்பதை கம்யூனிஸ்ட் தலைவரான பி.ராமமூர்த்தி விளக்குகிறார்...
“ஒரு மொழியின் வளர்ச்சியையும் செழுமையையும் கணிக்க வேண்டுமானால், அம்மொழியிலுள்ள பண்டைய நூல்களின் செழுமையைக் கொண்டு மட்டும் நிர்ணயித்துவிடமுடியாது. அந்தக் காலத்திலிருந்த சமூகத்தில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அது போதியதாக இருக்கும். ஆனால், சமூகத்தில் வளர்ச்சி ஏற்பட்டு வரும்போது, அந்தச் சமூகத்திலுள்ள பல்வேறு கருத்துக்களை, அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், கணிதம், சமூகவியல், சட்டம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு அம்மொழி எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதைக் கொண்டே அம்மொழியின் வளர்ச்சியை நிர்ணயிக்கமுடியும்...”
சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என பெயரிடவேண்டுமென 64 நாட்கள் உண்ணாவிரதமிருந்து, தான் இறந்தபிறகு தனது சடலத்தை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்கவேண்டுமெனச் சொல்லி மறைந்த காங்கிரசைச் சார்ந்த தியாகி சங்கரலிங்கனார் தமிழுக்கான தீவிர போராட்டத்தின் முன்னோடி என்றே சொல்லலாம். சட்டமன்றத்தில் முதன்முதலில் தமிழில்தான் பேசுவோமென போராடிப் பேசியவர்கள் மறைந்த தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், ஏ.நல்லசிவம். நாடாளுமன்றத்தில் செம்மொழிக்காக குரலுயர்த்திய, ரெயில்வே பணிக்கான தேர்வைத் தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டுமென கோரிக்கைவைத்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொ.மோகன் இன்றும் நம்மோடு இருக்கும் என்.சங்கரய்யா போன்ற தலைவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். அவர்களை நடைபெறும் இந்தச் செம்மொழி மாநாட்டில் நினைவு கூர்ந்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கான வரலாற்றிலும் பதிவுசெய்து கவுரவிக்கவேண்டும்.
பொதுவாக, உலகத்தமிழ் மாநாடுகளை தமிழகத்தில் ஆட்சியிலிருப்போர் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தமிழர்களின் மெல்லிய மொழி உணர்வை, மொழி வெறியாக்கி தேர்தலில் ஓட்டுக்காகவும் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆங்கிலவழிக் கல்விநிறுவனங்களும், தனியார் கல்விநிறுவனங்களும், தடுக்கி விழுந்தால் ஆங்கிலப்பள்ளி என்ற நிலையும் உருவாகியிருப்பது, தமிழ் தமிழென மேடைக்கு மேடைக் கூப்பாடுபோட்டு, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பின்னர்தான் என்ற உண்மை வரலாற்றை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பிற்கு, எந்தத்துறையும் கிடைக்காத பட்சத்தில் இறுதியாக தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவலநிலை யாரால் வந்தது? தமிழில் படித்தால் வேலைவாய்ப்பு குறைவு, தமிழில் படித்தால் அவமானம், தமிழில் படித்தால் பணம் சம்பாதிக்கமுடியாது என்ற நிலை உருவாவதற்கு காரணம் எது? நுகர்வு கலாசாரமும், உலகமயம், தனியார்மயம் மற்றும் தாராளமயத்தை அமலாக்கி மத்தியில் ஆட்சியிலிருந்துவரும் கட்சிகளும் திராவிடக்கட்சிகளும்தான் முக்கியக் காரணம்.
திரைத்துறையினரும் துதிபாடும் அரசு அமைப்புகளும் இன்னபிற அமைப்புகளும் பாராட்டுவிழா நடத்தி முடித்துள்ள நிலையில் கலைஞரின் புகழ்பாட மற்றுமொரு பிரம்மாண்டமான திருவிழா தேவைப்படுகிறது. அதனால்தான் இந்த மாநாடு நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
இந்த மாநாட்டில் புகழுரைகளும், ஆய்வுக்கட்டுரைகளும், கவிதைகளும், தமிழ்த் தொகுப்புகளும் தமிழுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால், கலைஞருக்கு நிச்சயமாக இருக்கும். அதற்காக மானமிகு வீரமணி, தொல்திருமா முதல் திரையுலகினர் வரை கலைஞரின் புகழ்பாட வெறிக்கொண்டு காத்திருக்கும் மாநாடாகவே இதுத் தெரிகிறது. அதிலும் (மானமிகு) வீரமணிக்கு கொஞ்சம்கூட சலிப்புத் தட்டாமல் எப்படித்தான் புகழ முடிகிறதோ தெரியவில்லை.
இத்தகையச் சூழலில், கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞரின் புகழை மட்டுமே பாடும் மாநாடாக அல்லாமல், உண்மையில் தமிழ்மொழி குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும், தமிழுக்காற்றவேண்டிய பணிகளை வடிவமைத்து அதன் வழியில் செயல்படவேண்டிய விதங்கள் குறித்தும் விவாதிக்குமென நம்புவோம்!
- இரா.சரவணன்
ஏதாவது செய்திடுவோம்!
இரா.சரவணன் வெள்ளி, 02 ஜூலை 2010 07:04

வாழவும் வழியில்லை
சாகவும் சட்டமில்லைஇருந்தாலும் வாழ்கிறோம்
இழிநிலையில் இன்றுவரை!
நகர்மயமாதலால்
குப்பைக்குக்கூட இடமுண்டு
மனிதனுக்கு இடமில்லை
சாலையோரத்தில்!

வாழ வழிகொடு என்றால்'
வா! செம்மொழி மாநாட்டுக்கு
வழிந்தோடுகிறது...
வழியெங்கும் தமிழ்
அள்ளிக்குடி' என்கிறார்!
காய்ந்துபோன வயிற்றுக்கு
தமிழாவது தெலுங்காவது!

கடைப்பெயரையெல்லாம்
தமிழில் மாற்றி
தமிழை வாழவைக்க
ஆசைப்பட்டோரே...
‘மதுபான விடுதி’
வாழ்ந்திடுமா தமிழ்?
தமிழாவது வாழ்ந்ததா?
அதுவுமில்லை!
கோவையில்
பத்துப்பாட்டுக்கு விழா!
கலைஞர் டிவியில்
குத்துப்பாட்டுக்கு விழா!
பாட்டுதான் தமிழில்
பேச்சில் இல்லை தமிழ்!

வேலைகொடு என்றால்
ஒரு ரூபாய்க்கு அரிசி இருக்கு
ஒய்யாரமாய் வீட்டிலிரு என்றிடுவார்!
கடைச்சரக்காகக் கூட இல்லை
கம்பெனி சரக்காக மாறியது கல்வி!
கட்டணத்தைக் குறைக்கச்சொல்லி
சாலையில் இறங்கிவிட்டால்
காளி வந்து ஆடுதுகாவல்துறைக்கு!

பன்னாட்டு முதலாளிக்கு
என் நாட்டுச் செல்வத்தை
கண்ணிரண்டை மூடிக்கொண்டு
வாரிகொடுத்த ஆட்சியினில்
குறிச்சுவைச்ச கூலி கேட்டால்
வளைச்சு வளைச்சு விளாசும் லத்தி!

ஒழித்தே தீருவோம்
குழந்தை தொழிலாளியை என
ஓங்காரமிடும் ஆட்சியில்
அப்பனுக்கும் வேலையில்லை
என்னதான் செய்திடுவான் பிள்ளை?

பட்டாசு ஆலைதனில்
கந்தகத்தோடு சேர்த்து
அப்பாவிப் பிஞ்சும் கருகும்!
குளுகுளு அறையினில்
குறைந்த ஒலியினில்
வாஞ்சையோடு பார்த்திடுவான்
வண்ணப்பெட்டி ஒளிரவே
ஓட்டுவாங்கி ஜெயிச்சவன்!

மந்திரிப் பதவிக்கு
மடிப்பிச்சை கேட்டிடுவார்!
மக்களுக்கான அரிசியை
மத்தியிலே குறைக்கும்போது
தலையாட்டி நின்றிடுவார்
மகுடிக்கு மயங்கிய பாம்பாக!

பேயாட்சி செய்திட்டாலும்
பிணம் கோடி விழுந்திட்டாலும்
மீண்டும் வந்திடுவோம் அரியணைக்கு!
ஆணவத்தோடு அலறுகிறார்காசிருக்காம் ஓட்டுவாங்க!
என்னதான் செய்திடுவர்
ஈனப்பிறவிகளென்ற
எக்காளத்தைத் தீயிட
ஏதாவது செய்திடுவோம்!
- இரா.சரவணன்

அங்காடித்தெரு... அழகுத்தெருவின் அலங்கோலம்

அங்காடித்தெரு... அழகுத்தெருவின் அலங்கோலம்
இரா.சரவணன் வெள்ளி, 30 ஏப்ரல் 2010 09:30

மலிவு விலைத் தெருவான தி.நகர் ரங்கநாதன் தெருவில் வானுயர்ந்து, பட்டொளி வீசி, பளபளக்கும் வணிக நிறுவனங்களில், வந்து நிற்கும் வாடிக்கையாளர்களிடம், “என்ன வேணும் சார்” என வாய் நிறையப் புன்னகையோடு கேட்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையின் பின்புலத்தையும், அவர்கள் கொடுக்கும் சொற்பச் சம்பளத்தைப் பெறுவதற்குள் அவர்கள் படும் பாட்டையும், கொக்கரிக்கும் வறுமையையும், அவர்களினூடாக இழையோடும் காதலையும், அண்ணாச்சிகளின் அகோரப் பற்களையும் துளியும் மறைக்காமல் துணிச்சலோடு படம் பிடித்து காட்டிய ஜி.வசந்தபாலனுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்ளலாம்.
விரிசல் விழுந்த பூமிக்குச் சொந்தமான தென்மாவட்டங்களிலிருந்து இளைஞர்களையும் பெண்களையும் கொத்துக் கொத்தாய் கொண்டுவந்து அடைத்து வைத்துச் சித்திரவதைப்படுத்தும் தெரு தான் ரங்கநாதன்தெரு என்பதை அப்பட்டமாய்ச் சித்தரித்திருக்கிறது இப்படம். வேலைக்கு ஆளெடுக்கும் போதே அப்பன் இல்லாதவனாய், அக்கா தங்கை உள்ளவனா பார்த்து வேலைக்கு எடு, அப்பதான் பொத்திக்கிட்டு வேலை செய்வான் என வணிக நிறுவனங்கள் தொழிலாளர்களின் வறுமையில் முதலீடு செய்வதை அருமையாய் இப்படம் விளக்குகிறது.
அவர்கள் உறங்குமிடத்தின் அவலத்தையும், வருமானம் வரும் கட்டடத்தை பளபளப்பாக வைத்திருக்கும் அண்ணாச்சிகள், உணவிற்காக வைத்துள்ள இடத்தைப் பார்க்கும்போது சித்திரவதைச் சிறைச்சாலைகளை நினைவூட்டுகிறது. உணவிற்காக மூன்றாவது தெரு சென்றுத் திரும்பி வருவதற்காக அவர்கள் கொடுக்கப்படும் அரைமணி நேரமும், ஒருநிமிடம் தாமதமாக வந்தால் சம்பளத்தில் ஒரு ரூபாய் பிடிக்கப்படுவதும், சக தொழிலாளியின் சாவிற்கு சென்றதற்குக் கூட சம்பளம் பிடிக்கப்படும் நிகழ்வுகளும் முதலாளித்துவத்தின் முகமூடியை இப்படம் கிழிக்கிறது.
தென்மாவட்டத்தில் லெவல் கிராசிங் கேட்டில் ரெயில்மோதி தந்தையை இழந்த, பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவனாக தேர்ச்சிபெற்ற மாணவன் படத்தின் கதாநாயகன் லிங்கு. தந்தையை இழந்த பின்பு குடும்பத்தைக் காப்பாற்ற ரங்கநாதன் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் கடையில் வேலைக்குச் சேருகிறான். கதாநாயாகி கனியும் குடும்ப வறுமைக் காரணமாக இங்கு வந்து சேருகிறாள். கனியின் பதிமூன்று வயது தங்கை ஒரு மாமியின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்படுவது, குழந்தைத் தொழிலாளர் வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஆழமான பதிவு.
அந்தக் கடையில் எதற்கும் உரிமையில்லாதவர்களாக கருங்காலி என்று தொழிலாளிகள் அழைக்கும் சூப்பர்வைசரால் அடித்தும் உதைத்தும் மனிதாபிமானமற்ற முறையில் தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். செய்யும் சிறு தவறுகளுக்கு ஆண்கள் அடி உதையோடும் பெண்களென்றால் அடி உதையோடு பாலியல் தொந்தரவுகளுடனும் வேலையை தக்க வைத்துக்கொள்ள நேர்வதை வெளிக்கொணர்ந்திருக்கிறது. செய்த சிறு தவறுக்காக என்ன சொல்லி தப்பிச்ச என்று லிங்கு கேட்கும்போது, கனி கூறும் பதில் மனதில் நெருப்பையும் கண்ணில் கண்ணீரையும் வரவழைக்கிறது.
ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் காதலும் வறுமை வந்தால் நொறுங்கித்தான் போய்விடுகிறது. லிங்குவின் நண்பன் சௌந்தரபாண்டியனின் காதல் சூப்பர்வைசருக்குத் தெரியவர குடும்ப வறுமைக் காரணமாக தன்னுயிர்க் காதலை இயலாமையாய் மறுத்து, மறைக்கிறான். இதன் விளைவாய் காதலி மாடியிலிருந்துக் குதித்து தற்கொலை செய்கிறாள். இதே ரங்கநாதன் தெருவில் சிலவருடங்களுக்கு முன் ஒரு தொழிலாளி மாடியிலிருந்து விழுந்து இறந்த உண்மைச் சம்பவம் நினைவிற்கு வருகிறது.
அதே ரங்கநாதன் தெருவில் வேலைத் தேடித்தேடி விரக்தியான இளைஞனை திருடனாக, கொலைகாரனாக, கொள்ளைக்கூட்டத் தலைவனாக மாற்றாமல் சிறுநீர்க் கழிக்குமிடத்தை சுத்தம் செய்து அதைக் கட்டண சிறுநீர்க் கழிப்பறையாக மாற்றி உழைப்புதான் உன்னதம் என்பதை இளைஞர்கள் மனதில் அற்புதமாக விதைக்கிறார். பாலியல் தொழிலுக்காட்பட்ட ஒரு பெண் குள்ளமான மனிதனை திருமணம் செய்து குள்ளமான குழந்தை பெற்றுக்கொண்டதற்கு மனதிருப்தியுடன் கூறும் காரணம், கற்பு என்ற பெயரில் சமூகம் பார்க்கும் பார்வையைச் சாடுகிறது. அத்தெருவில் இப்படி பலரின் வாழ்நிலையை நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது இப்படம்.
ஆண்களின் பழைய காதலை ஏற்றுக்கொள்ளும் ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் பழைய காதலை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இப்படத்தில் பெண்களுக்கும் பழையக்காதல் இருப்பதில் தவறில்லை என்ற முற்போக்கு சிந்தனை ஊன்றப்பட்டிருக்கிறது. 9ம் வகுப்பு கடவுள் வாழ்த்தை காதல் கவிதையாக மாற்றி காதலிக்கு கொடுக்கும் பிளாக் பாண்டி, வறுமை வாட்டியெடுத்தாலும் இளமைக் குறும்புகள் என்றும் விடாது என்பதை படத்தில் கலகலப்பாக காட்டியபோதிலும் கதையின் நோக்கம் மனதில் நின்றுவிடுவதால் கனத்த இதயத்துடனே சிரிக்க வேண்டியிருக்கிறது.
இறுதியாக நாயகனும் நாயகியும் கடையை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களிருவரும் தங்குவதற்கு இடமின்றி கே.கே.நகர் நடைமேடையில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களோடு படுத்திருக்கும்போது ஏற்படும் விபத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி. இசையின் ஓசையில் பாடல்வரிகள் காணாமல் போகும் மற்ற பாடல்களுக்கு இடையில், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..., உன்பேரைச் சொல்லும்போதே... ஆகிய, கதைக்காகவே தெரிவு செய்த பாடல்களும் இதமான இசைகளும் கேட்க இனிமையாய் இருக்கின்றன.
மொத்தத்தில், ரங்கநாதன் தெருவுக்குச் சென்று இயந்திரத்தனமாய் பொருட்கள் வாங்குவதும் திரும்புவதுமாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அத்தொழிலாளர்களின் வாழ்க்கையின் மறுபுறத்தைக் காட்டி அவர்களின் வாழ்நிலையைப் பற்றி சிந்திக்க வைத்தப் படமாக விளங்குகிறது அங்காடித் தெரு. அங்காடித்தெரு திரைப்படம் வெளியான பிறகு அரசு அதிகாரிகள் தி.நகர் ரங்கநாதன் தெருவில் தொழிலாளர்கள் நிலையை அறிந்துகொள்ள விசாரணை நடத்தியிருக்கின்றனர் என்ற செய்தி இப்படத்தின் இயக்குநர் வசந்தபாலனின் முயற்சிக்கு மாபெரும் வெற்றியாகக் கருதலாம்.
-இரா.சரவணன்